கோலாலம்பூர், ஆக 8 – ம.இ.காவின் புதிய தலைமைச் செயலாளராக, ம.இ.காவின் மத்திய செயலவை உறுப்பினரும் , கெடா மாநில ம.இ.காவின் தலைவருமான டத்தோ டாக்டர் ஆனந்தன் சோமசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற ம.இ.கா மத்திய செயலவை கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ SA விக்னேஸ்வரன் இந்த நியமனம் குறித்து தமக்கு அறிவித்தாக வணக்கம் மலேசியாவிடம் ஆனந்தன் உறுதிப்படுத்தினார். தம்மீது நம்பிக்கை வைத்து தலைமைச் செயலாளராக நியமித்துள்ள தேசியத் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் அவர் எடுக்கும் அனைத்து திட்டங்களுக்கும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவேன் என தெரிவித்தார். முன்னாள் மேலவை உறுப்பினருமான ஆனந்தன் கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக 2022 ஆம் ஆண்டு இஸ்மாயில் சப்ரி பிரதமராக இருந்தபோது அவரது அரசியல் செயலாளராகவும் இருந்துள்ளார்.
கெடா ,செர்டாங்கிலுள்ள கணேசர் தமிழ் பள்ளியில் தனது தொடக்க கல்வியை தொடங்கிய S . ஆனந்தன் ஸ்ரீ கோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்ற பின் சில காலம் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில் கல்வித் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவரான ஆனந்தன் பிறகு பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் பி.எச்.டி பட்டத்தையும் பெற்றுள்ளார். கடந்த 36ஆண்டு காலமாக ம.இ.கவில் கிளை செயலாளர் , தலைவர், மாநில செயலாளர், மாநில தலைவர், மந்திரிபுசாரின் உதவியாளர் என எல்லா நிலைகளிலும் பணியாற்றி ம.இ.கா தலைமைத்துவம் மற்றும் உறுப்பினர்களுடன் அணுக்கமான தொடர்புகளை அவர் கொண்டுள்ளார். இந்த நியமனத்திற்காக ம.இ.காவிவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கும் தனது நன்றியை ஆனந்தன் தெரிவித்துக் கொண்டார்.