
கோலாலம்பூர். நவ – இளைஞர், மகளிர், புத்ரா மற்றும் புத்ரி பிரிவுகளின் ஆதரவை ம.இ.கா பெற்றுள்ளதால் கட்சி தொடர்ந்து வலுவதாக இருந்துவருதாக ம.இ.காவின் தேசிய துணைத்தலைவரான டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார். ம.இ.கா அரசாங்கத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்திய சமூகத்திற்கு தொடர்ந்து தனது சேவையை வழங்கி வருகிறது. கட்சி சுயேச்சையாக செயல்படுவதால் ம.இ.கா யாரையும் நம்பியிருக்கவில்லை என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் தெரிவித்தார்.
நேற்று கோலாலம்பூர் ஸ்ரீ பசிபிக் தங்கும் விடுதியில் ம.இ.கா இளைஞர், மகளிர், புத்ரா புத்ரா மற்றும் புத்ரி பிரிவுகளின் பேராளர் கூட்டத்தை தொடக்கிவைத்து பேசிய சரவணன், ம.இ.கா விற்கு அதன் உறுப்பினர்களின் ஒற்றுமைத்தான் மூல காரணமாக இருந்து வருகிறது என்று கூறினார். தற்போது ம.இ.கா சிறந்த தலைமைத்துவத்துடன் செயல்பட்டு வருகிறது. எனவே, ம.இ.கா உறுப்பினர்கள் தொடர்ந்து நம்பிக்கையுடன் கட்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும் என சரவணன் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே ம.இகாவில் இளைஞர்களை கவர்வதற்கு நாடு முழுவதிலும் தொடர்ந்து கருத்தரங்குகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக ம.இ.கா இளைஞர் பிரிவின் தலைவரும் ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான ரவின் குமார் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
மற்றொரு நிலவரத்தில் ம.இ.கா தேசிய மகளிர் பிரிவின் தலைவியாக தேர்வு செய்யப்படுவோர் கட்சியின் உதவித் தலைவராக நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ம.இ.கா மகளிர் பிரிவின் தலைவி மோகனா முனியாண்டி முன்வைத்தார்.
மேலும், நீண்ட காலமாக தொகுதி காங்கிரஸ் தலைவர்களாகவோ அல்லது மாநில தலைவிகளாகவோ இருந்து வரும் பெண்கள் கட்சியில் அடுத்த கட்ட நிலைக்கு செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதோடு இது தொடர்பான சட்டத்திருத்தங்கள் செய்வதற்கான கோரிக்கைகளும் பரிந்துரைக்கப்படும் என என அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் எவரெஸ்ட் அடிவார முகாமை அடைந்து சாதனை படைத்த ஜெக்லின் கவுர் என்ற சிறுமியும் கௌரவிக்கப்பட்டார்.