கோலாலம்பூர், செப்டம்பர் 9 – எதிர்கால சவால்களை எதிர்கொள்ளவும், சமூகத்தில் கட்சியின் நிலையை மீட்டெடுக்கவும் ம.இ.கா உறுதியாக உள்ளது என ம.இ.காவின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
78ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் ம.இ.கா கட்சியின், மகளிர், இளைஞர், புத்ரா மற்றும் புத்ரி பிரிவுகளின் தலைவர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்ட நிலையில், இக்கட்சி எதிர்கால அரசியல் சவால்களை எதிர்நோக்க மேலும் தயாராக உள்ளதாக அவர் கூறினார்.
இந்த நாட்டிலுள்ள இந்தியச் சமூகத்தினர்களின் பிரச்சினைகளுக்குச் செவி சாய்த்து, தொடர்ந்து குரல் கொடுக்கும் ஒரே கட்சியான ம.இ.கா, எக்காலத்திலும் சவால்களை எதிர்கொள்ள, அதன் தலைவர் டான் ஸ்ரீ ஏ. விக்னேஸ்வரன் பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
ம.இ.கா தேசிய மகளிர், இளைஞர், புத்ரா மற்றும் புத்திரிகளுக்கான மாநாட்டிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம், தப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சரவணன் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் இந்தியச் சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்கள், குறிப்பாக மெட்ரிகுலேஷன் திட்டத்தில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை மற்றும் பொது உயர்கல்வி கூடங்களில் விருப்பமான துறைகளைத் தேர்ந்தெடுக்கும் சிரமங்கள் ஆகியவை குறித்து முன்வைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
ம.இ.கா கட்சியைப் புத்தாக்கப் பாதையில் வழிநடத்தி அதன் உருமாற்றத்திற்கு வித்திட இளைஞர்கள் விவேகமாகச் செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
நேற்று நடைபெற்ற மாநாட்டில் நாடு தழுவிய அளவிலிருந்து 410 மகளிர் உட்பட மொத்தம் 1,200 பேராளர்கள் கலந்து கொண்டனர்.