
கோலாலம்பூர், ஆக 27 – ம.இ.கா தலைமையகத்தில் கடந்த ஆகஸ்டு 21ஆம் திகதி நிகழ்ந்த புது கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் இந்து முறைப்படி பூஜை, இஸ்லாமிய மற்றும் கிருஸ்துவ சமயப்படி பிரார்த்தனை என மூவின நம்பிக்கைப்படி நடத்தப்பட்ட வழிப்பாட்டில் குற்ற அம்சம் எதுவும் நிகழவில்லை என போலிஸ் கூறியுள்ளது.
சமூக ஊடகத்தில் நேரலையாக ஒளிப்பரப்பபட்ட அந்த நிகழ்வில் குற்ற அம்சம் எதனையும் எங்கள் தரப்பு கண்டுபிடிக்கவில்லை என புக்கிட் அமானின் குற்றவியல் துறையின் தலைவராக புதிதாக நியமனம் செய்யப்பட்ட டத்தோ ஶ்ரீ முகமட் சுஹாய்லி முகமட் சாய்ன் தெரிவித்தார்.
இருப்பினும், இது குறித்து மேலும் விசாரணை செய்யப்படும். இதில் குற்ற அம்சம் இல்லை, மேலும் சமய விவகாரம் மட்டுமே இதில் அடங்கியுள்ளதால் ஜாவி அமைப்பு மேல் விசாரனையை மேற்கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார்.