
கோலாலம்பூர், செப் 12 – இம்மாதம் பிற்பகுதியில் நடைபெறும் ம. சீ.ச தலைவர் பதவி தேர்தலில் அதன் நடப்பு தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் தான் சோங் செங்கிடமிருந்து நேரடி போட்டியை எதிர்நோக்கியுள்ளார். டாக்டர் வீயும் டானும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான தங்களது வேட்புமனுத் தாக்கலை ம.சீ.சவின் தலைமையகத்தில் நேற்று சமர்ப்பித்தனர். ம.சீ.ச துணைத் தலைவர் பதவிக்கு நடப்பு துணைத்தலைவர் டத்தோ டாக்டர் மா ஹாங் சூன் மட்டுமே போட்டியிடுகிறார். அதேபோன்று ம.சீ. மளிர் துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்வதற்கு நடப்பு துணைத்தலைவர் தீ ஹூய் லிங் மட்டுமே வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
ம.சீ.ச மகளிர் பிரிவின் தலைவர் பதவியை தற்காத்துக் கொள்வதற்கு வோங் யூ ஃபோங் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பினாங்கு ம.சீ. ச மகளிர் தலைவி டத்தோ ஊய் சியூ கிம் போட்டியிடுகிறார். கட்சியின் நான்கு உதவித் தலைவர் பதவிக்கு எழுவர் போட்டியிடுகின்றனர். ம.சீ.சவின் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுக்கான தேர்தல் செப்டம்பர் 23 ஆம் தேதியும் ம.சீ.ச மத்திய செயலவைக்கான தேர்தல் செப்டம்பர் 24ஆம் தேதியும் நடைபெறவிருக்கிறது.