
கிளந்தான், குவாலா கெராயிலுள்ள, கம்போங் ஜோஹால் கிராமத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், சுற்று வட்டார மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
குறிப்பாக, அப்பகுதியில் சுற்றி திரியும் மூன்று யானைகள், விளை நிலங்களை அழிப்பதோடு, பயிர்களுக்கு நீர் பாய்ச்ச அமைக்கப்பட்டிருக்கும் குழாய்களையும் மிதித்து சேதம் செய்வதாக கூறப்படுகிறது.
கடந்த மூன்று வாரங்களாக, அந்த யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், அவற்றுக்கு அஞ்சி கிராம மக்கள் சிலர் மரம் வெட்ட செல்வதை தவிர்த்து வருவதாகவும், 42 வயது அஸ்மாடி மூடா தெரிவித்தார்.
கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டு பகுதி அழிக்கப்படுவதால், சம்பந்தப்பட்ட யானைகள் அவ்வப்போது காட்டை விட்டு வெளியேறி கிராம மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
ஜோஹால் கிராமத்தை தவிர்த்து, அருகிலுள்ள கம்போங் பஹாகியாவிலும் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
அதனால், யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த PERHILITAN தேசிய வனவிலங்கு பாதுகாப்பு துறையின் உதவி நாடப்பட்டுள்ளதோடு, மின்சார வேலிகளை அமைக்க உள்ளூர் தலைவர்களிடமும் உதவி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.