
முதுமலை, மார்ச் 31 – தாயை பிரிந்து தவித்த 5 மாத ஆண் யானை குட்டி ஒன்று ஆஸ்கர் விருது வென்ற ஆவணப்படத்தில் இடம்பெற்றிருந்த பொம்மன்-பெள்ளி தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அந்த யானை குட்டி தற்போது உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீப நாட்களாக தமிழ்நாட்டில் யானைகளின் உயிரிழப்பு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருவதை அடுத்து, காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அந்த வகையில், தாயிடமிருந்து பிரிந்து கிணற்றில் விழுந்த குட்டியானையை மீட்டு, அதை பராமரிக்கும் பொறுப்பை, வனத் துறையினர் பொம்மன் பெல்லி தம்பதியரிடம் வழங்கினர்.
இந்நிலையில், அவர்கள் வளர்த்த குட்டியானையின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்தது.
ஏற்கனவே, தாங்கள் வளர்த்த ரகு-அம்மு யானைகள் வேறு ஒரு பாகன்களிடம் கொடுக்கப்பட்ட நிலையில், புதிதாக வந்த குட்டி யானையும் எதிர்பாராத விதமாக இறந்திருப்பதை அடுத்து, இந்த உயிரிழப்பு யார் கண்பட்டு நிகழ்ந்ததோ? என்று பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.