
சென்னை, மார்ச் 21 – தனது வீட்டின் லாக்கரிலிருந்த தங்கம், வைரம், வைடூரியம் என 60 பவுன் நகைகள் திருடுப் போயிருந்ததாக, நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா போலிசில் புகார் கொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து போலீசார் வீட்டு பணிப் பெண் ஒருவரைப் பிடித்துள்ளனர்.
ஒரு ஜோடி வைரம், பழங்கால தங்க நகைகள், நவரத்தின நகைகள், பழங்கால வைரம், ஆரம், நெக்லஸ், வளையல்கள் உட்பட 60 பவுன் நகைகள் காணாமல் போயிருப்பதாக ஐஸ்வர்யா குறிப்பிட்டிருந்தார்.
அந்த நகைகள் திருமணத்துக்கு முன்னும், பின்னும் என 18 ஆண்டுகளாக வாங்கப்பட்டவை என அவர் கூறியிருந்தார்.
அதோடு, நகைகள் திருடுப் போன சம்பவத்தில் தனது வீட்டில் வேலை செய்யும் 2 பணிப்பெண்களையும் கார் ஓட்டுநரையும் சந்தேகப்படுவதாகவும் , அவர் போலீஸ் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
அதையடுத்து அந்த பணிப்பெண்களையும் , கார் ஓட்டுநரையும் போலீசார் விசாரித்தனர். அந்த விசாரணையில் பணிப்பெண் ஈஸ்வரி என்பவரிடமிருந்து 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டதாகவும், அந்த நகைகள் கடந்த 4 ஆண்டுகளாக சிறிது சிறிதாக திருடப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.