கோம்பாக், ஆகஸ்ட்-19, சிலாங்கூர், ரவாங்கில் கொடூரமான சித்ரவதைகளை அனுபவித்து 8 வயது சிறுமி மரணமடைந்த சம்பவம் தொடர்பில், தாயும் மாற்றான் தந்தையும் கைதாகியுள்ளனர்.
சனிக்கிழமை மாலை பண்டார் தாசேக் புத்ரியில் உள்ள அடுக்குமாடி வீட்டில் அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கைகளால் அடித்தும், கால்களால் எட்டி உதைத்தும் போதாதென்று, இடைவார், துணி மாட்டும் hanger, கூர்மையற்ற ஆயுதங்களாலும் அச்சிறுமி கடுமையாகத் தாக்கப்பட்டாள்.
இதனால் மரண வேதனையை அனுபவித்து, கடைசியில் அச்சிறுமி உயிரை விட்டாள்.
அவளது முகம், உதடு, தொடை, கால் முட்டி ஆகிய இடங்களில் மோசமான காயத் தளும்புகள் இருந்தது தொடக்கக் கட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து கொலைச்சம்பவமாக அது வகைப்படுத்தப்பட்டு விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது.
கைதான தம்பதி ஒரு வாரத்திற்கு விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ரவாங்கில் ஆரம்பப் பள்ளியொன்றில் இரண்டாமாண்டில் பயிலும் அச்சிறுமி கடந்த ஜூன் மாதத்திலிருந்தே பள்ளிக்குச் செல்லவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.