
ரஷியா, ஆக 21 – கடந்த 50 ஆண்டுகளில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் ரஷியாவின் நிலவுத் திட்டம் கலைந்துவிட்டது.
“ Luna 25- probe” எனம் அதன் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் ரஷியாவின் நிலவுப் பயணம் கலைந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை காலை 2.57 மணி உள்ளூர் நேரப்படி லேண்டருடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது. இரு நாட்கள் அதனை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அந்த முயற்சி பலனளிக்கவில்லை.
இந்த விபத்து நடந்தற்கான காரணம் ஆராயப்படும் என ரஷியாவின் விண்வெளி நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவும் சந்திராயன் 3 வழி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் முயற்சியில் இறங்கியிருந்த நிலையில் ரஷியா திடிரென கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி தானும் அதே முயற்சியில் இறங்கியிருப்பதாக கூறி லூனா 25 ராக்கெட்டை பாய்ச்சியது. இந்தியாவுக்குப் போட்டியாக ரஷியா இதை அனுப்பியிருக்கிறதா எனும் கேள்வி விஞ்ஞானிகள் மத்தியிலும் விண்வெளி ஆர்வலர்கள் மத்தியிலும் எழுந்தது.
ரஷியாவின் இத்திட்டம் தோல்வி அடைந்திருப்பதால் வருகின்ற 23ஆம் திகதி இந்தியா வெற்றிகரமாக நிலவில் விக்ரம் லேண்டரை தரையிறக்கினால் தென் துருவத்தில் இறங்கிய உலகிலேயே முதல் நாடு எனும் பெருமையை தட்டிச் செல்லும்.