கோலாலம்பூர், நவம்பர்-5 – யுக்ரேய்ன் – ரஷ்யா போரில் கூலிப்படையாகப் பங்கேற்றதாகக் கூறப்படும் மலேசிய ஆடவர் இன்னமும் உயிரோடும், பாதுகாப்பாகவும் இருக்கின்றார்.
உளவுத் தகவல்களை மேற்கோள்காட்டி தேசியப் போலீஸ் படைத் தலைவர் (IGP) தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் அத்தகவலை உறுதிபடுத்தினார்.
கெடாவைச் சேர்ந்த 20 வயது அவ்விளைஞர், இதற்கு முன் ரஷ்ய இராணுவத்தின் உடைந்த ட்ரோன் பாகங்கள் பட்டு காயமடைந்தார்.
யுக்ரேய்ன் இராணுவத்தில் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக போரிட, இணையம் வாயிலாக அவர் விண்ணப்பித்ததும் உளவுத் தகவலில் தெரிய வந்ததாக IGP சொன்னார்.
இராணுவத்தில் அவருக்கு இயற்கையாகவே மிகுந்த ஈடுபாடு உண்டு;
அதோடு, போர்க்களத்தின் அபாய அளவைப் பொருத்து 400 டாலர் முதல் 2,700 டாலர் வரை மாதச் சம்பளம் வழங்கப்படுவதும் அவரைப் பெரிதும் ஈர்த்திருக்கிறது.
குடும்பச் சூழலும் நிர்பந்தித்ததால், வேறு வழியின்றி அவர் தொலை தூரத்தில் வேலைத் தேடிச் சென்றுள்ளதாக தான் ஸ்ரீ ரசாருடின் சொன்னார்.
யுக்ரேய்னின் லிவாட்னி போர்க்களத்தில் மலேசியப் பிரஜையின் அடையாள அட்டையும் வாகனமோட்டும் உரிமமும் கண்டெடுக்கப்பட்டதாக முன்னதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
அவர் இறந்திருக்கலாம் அல்லது ரஷ்ய இராணுவத்தால் சிறைப் பிடிக்கப்பட்டிருக்கலாம் என, சமூக ஊடகங்களில் யூகங்களும் வெளியாகியிருந்தன.