மோஸ்கோ, மே 7 – ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புதின் இன்று பதவியேற்கிறார்.
புதின் ரஷ்ய அதிபராக பதவியேற்பது இது ஐந்தாவது முறையாகும்.
அந்த பதவியேற்று சடங்கு தலைநகர் மாஸ்கோவில் இன்று நடைபெறுமென, அனடோலு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மார்சில் நடந்து முடிந்த ரஷ்ய அதிபர் தேர்தலில், புதின் நிர்வாகம் 87 விழுக்காட்டு பெரும்பான்மை ஆதரவை தக்க வைத்துக் கொண்டதை அடுத்து அவர்மீண்டும் அதிபராக பதவி ஏற்கிறார்.
அந்த பதவியேற்பு சடங்கிற்கு பின், பிரதமர் வேட்பாளர் பெயரை ரஷ்ய நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக புதின் சமர்ப்பிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
புதின் பரிந்துரைக்கும் வேட்பாளரை ஏற்கும் அல்லது நிராகரிக்கும் அதிகாரம் ரஷ்ய நாடாளுமன்றத்திற்கு இருந்தாலும், முன்மொழிந்த வேட்பாளரை மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து மூன்று முறை நிராகரிக்கும் பட்சத்தில், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி நேரடியாக பிரதமரை நியமிக்கும் அதிகாரம் புதினுக்கு உண்டு.
மேலும், அதுபோன்ற சூழல் ஈற்பட்டால், நாடாளுமன்றத்தை கலைத்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் உரிமையும் புதினுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் நியமிக்கப்பட்டவுடன், வெளியுறவு அமைச்சர், தற்காப்பு அமைச்சர், நீதித் துறை அமைச்சர், உள்துறை மற்றும் அவசரக்கால அமைச்சர் ஆகியோரை நியமிப்பது உட்பட ஆலோசக மன்றங்களை அமைக்கும் முழு அதிகாரமும் புதினுக்கு உண்டு.