புதுடில்லி, மார்ச் 2 – உக்ரைய்னில் ரஷ்யா நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் சிக்கி உயிரிழந்த இந்திய மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பாவின் உடலை அவரது சொந்த ஊரான கர்நாடாகவின் ஹாவேரிக்கு கொண்டுவருவதற்காக ஏற்பாடுகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
கார்க்கீவ் நகரில் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்றுவந்த நான்காம் ஆண்டு மாணவராக நவீன் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள பதுங்கு குழியில் பதுங்கியிருந்தார்.
நேற்று காலை உணவுப் பொருள் வாங்குவதற்காக ஆளுநர் மாளிகைக்கு அருகில் உள்ள கடைக்கு சென்று அவர் வரிசையில் காத்திருந்தார். அப்போது ரஷ்ய போர் விமானம் நடத்திய ராக்கேட் தாக்குதலில் காயத்திற்கு உள்ளாகி மரணம் அடைந்தார்.
இந்த சம்பவம் நடைபெறுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர்தான் நவீன் தமது தந்தையுடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். நவீன் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாணவர் நவீனின் பெற்றோர்களுக்கு தமது ஆறுதலை தெரிவித்துக்கொண்டார்.