ஜெய்ப்பூர், நவம்பர்-11 – இந்தியா, ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில், நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த பறவைகள் மர்மமான முறையில் மடிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சம்பா ஏரியில் அக்டோபர் 26 தொடங்கி இரண்டே வாரங்களில் 600 பறவைகள் கொத்துக் கொத்தாக மடிந்துள்ளன.
மடிந்த பறவைகளின் மாதிரி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், அவையனைத்தும் ஒருவித பாக்டீரியா கிருமியால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
அக்கிருமி பாதிப்புக்கு ஆளான பறவைகளின் இறகுகள் மற்றும் கால்கள் செயலிழந்து அவை இறந்து போய்விடும்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பறவைகளுக்கு சிகிச்சையளித்து, கிருமித் தொற்று மேலும் பரவாதிருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கு முன் 2019-ஆம் ஆண்டு இதே போன்று ஏற்பட்ட கிருமிப் பரவலால் 18,000 பறவைகள் மடிந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், சம்பா ஏரிக்கு வந்துசேரும் புலம்பெயர்ந்த பறவைகளின் எண்ணிக்கைக் குறைந்தபாடில்லை.
ஆயிரக்கணக்கில் அவை அங்கு வந்துகொண்டு தான் இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
அந்த ஏரியில் தற்போது 300,000 புலம்பெயர்ந்த பறவைகள் வாழ்வதாக கூறப்படுகிறது.