
கோலாலம்பூர், டிச 28 – போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதன் மூலம் 11.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 300 கிலோவுக்கும் அதிகமான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கிறிஸ்துமஸ் முதல் நாள் செத்தியாவங்சாவில் உள்ள வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் விற்பனையாளர்களாக பணிபுரிந்து வந்த அந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் துணை ஓ.சி.பி.டி துணை கமிஷனர் டத்தோ Yahaya Othman தெரிவித்தார்.
போதைப் பொருளை பத்திரப்படுத்தி வைக்கும் கிடங்காக அந்த வீட்டை இரண்டு சந்தேக நபர்களும் பயன்படுத்தி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்ததாக இன்று கோலாலம்பூர் மாநாகரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார். சீன மூலிகை தேயிலை என முத்திரையிடப்பட்ட 310 பச்சை பொட்டலங்களில் மொத்தம் 320 கிலோ போதைப் பொருள் இருந்ததாக Yahaya Othman தெரிவித்தார். இவ்வாண்டு கோலாலம்பூரில் பெரிய அளவில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் இதுவாகும் என அவர் கூறினார். கைது செய்யப்பட்ட இரு சந்தேகப் பேர்வழிகளில் ஒருவர் கார் விற்பனையாளராகவும் மற்றொருவர் மின் வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.