
கோலாலம்பூர், ஆக 23 – 520.000 ரிங்கிட் மதிப்புள்ள 16 கிலோ ஷாபு போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீசார் இக்கும்பலுக்கு முதுகெலும்பாக செயல்பட்ட தாய்லாந்து பெண் ஒருவர் உட்பட ஐவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் உள்நாட்டை சேர்ந்த ஆடவர் ஆவார். கடந்த வெள்ளிக்கிழமை கூட்டரசு தலைநகரில் மேற்கொள்ளப்பட்ட மூன்று வெவ்வேறு நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் Allaudeen Abdul Majid தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் 23 முதல் 30 வயதுடைய மூன்று தாய்லாந்து பிரஜைகளில் ஒரு தம்பதியரும் அடங்குவர் என அவர் கூறினார். அந்த தம்பதியர் தோம்யாம் கடையில் வேலை செய்து வருகின்றனர். உள்நாட்டு ஆடவர் சிலாங்கூரில் உள்ள குதிரை தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களாக கூட்டரசு தலைநகரில் இந்த கும்பல் போதைப் பொருளை விநியோகித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கும்பல் தங்களது காரை போதைப் பொருளை பத்திரப்படுத்தி வைக்கும் மையமாக பயன்படுத்தி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவருவதாக Alaudeen Abdul Majid தெரிவித்தார்.