
கோலாலம்பூர், மார்ச் 18 – 13 வயது Revnesh Kumar மரணம் தொடர்பாக வெளிநாடுகளின் நிபுணர்களை உட்படுத்திய சுயேச்சை குழு விசாரணை நடத்தும். அச்சிறுவனின் மரணம் தொடர்பாக மலேசிய சுகாதார அமைச்சு தயாரித்த அறிக்கையையும் அந்த சுயேச்சை குழு விசாரணை செய்து ஆராயும்.
தடுப்பூசியின் காரணமாக ஏற்பட்ட சில விளைவுகள் குறித்தும் அந்த குழு விசாரணை நடத்தும் என சுகாதார அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்துள்ளார். கோவிட் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்ட 18 நாட்களுக்குப் பிறகு Revnesh Kumar மரணம் அடைந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் Charles Santiago எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது Khairi Jamaluddin நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார். பெற்றோர்களின் அச்சத்தை குறைக்கும் வகையில் சவ பரிசோதனை அறிக்கை தொடர்பில் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தாம் கேட்டுக்கொண்டதாகவும் தமது டுவிட்டரில் Santiago பதிவிட்டுள்ளார். Revnesh மரணத்திற்கும் கோவிட்டிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கும் தொடர்பு இல்லையென மார்ச் 9 ஆம் தேதி மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.