Latestமலேசியா

ரொஸ்மாவிற்கு 10 ஆண்டுகள் சிறை; 970 மில்லியன் ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூர், செப் 1 – ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ரொஸ்மா மன்சோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 97 கோடி  ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

இவ்வேளையில், மேல் முறையீட்டு நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்யும் வரையில்,  ரொஸ்மாவின் சிறைத் தண்டனையையும் அபராதத்தையும் ஒத்தி வைப்பதற்கான விண்ணப்பத்தை , உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

அந்த அபராதத்தை செலுத்தத் தவறினால் , ரொஸ்மாவின் தண்டனை  காலம்  மேலும்  30 ஆண்டுகள் அதிகரிக்கப்படும் .

ரொஸ்மா, 125 கோடி ரிங்கிட்  மதிப்பிலான , சரவாக் புறநகர் பள்ளிகளுக்கான  சூரிய மின்சக்தி திட்டம் தொடர்பில்   3  குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்தார்.

369 புறநகர் பள்ளிகளுக்கு சூரிய  மின் சக்தியை ஏற்படுத்தி தரும்  அத்திட்டம் தொடர்பில்,  18 கோடியே 75 லட்சம் ரிங்கிட்டை கேட்டதாகவும்,  15 லட்சம் ரிங்கிட்டைப் பெற்றதாகவும் , 2018 நவம்பரில் ரொஸ்மா மீது  குற்றம் சாட்டப்பட்டது.

அந்த  குற்றங்களை,  அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி  நிரூபித்திருப்பதாக, உயர் நீதிமன்ற நீதிபதி சய்னி  மஸ்லான்  ( Zaini Mazlan ) தெரிவித்தார்.

அந்த தீர்ப்பை அடுத்து, சமூகத்தில் ரொஸ்மாவின் பங்களிப்பை கருத்தில் கொண்டு  அவருக்கு மிக குறைந்தபட்ச தண்டனையை விதிக்கக் கோரி ரொஸ்மாவின்  வழக்கறிஞர் ,  ஜக்ஜிட் சிங் ( Jagjit Singh)  நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டிருந்தார்.

அவருக்கு , ஒரு நாள் சிறையுடன் மேலும் சில குறைந்தபட்ச தண்டனைகளை விதிக்கும்படி  அவரது வழக்கறிஞர் பரிந்துரைத்திருந்தார்.

இதனிடையே,  அரசு  துணை வழக்கறிஞரான கோபால் ஶ்ரீ ராம் , ரொஸ்மவுக்கு  அதிகபட்ச  தண்டனை வழங்கப்பட வேண்டுமென,   நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.

அதைக் கேட்டு, குற்றவாளி கூண்டில் இருந்த ரொஸ்மா  , அந்த அதிகபட்ச தண்டனைக்குப் பதிலாக தம்மை கொன்று விடுவதே  மேல் என கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!