
ஜோர்ஜ் டவுன், ஜன 3 – கெடாவில், சூதாட்ட மையங்களை மூடியிருக்கும் பாஸ் தலைமையிலான அம்மாநில அரசாங்கம் தற்போது லங்காவியில் மதுபான விற்பனையைக் கட்டுப்படுத்த உத்தேசித்திருக்கின்றது. இவ்வேளையில், அத்தகையதொரு முடிவு எடுக்கப்பட்டால், அத்தீவின் சுற்றுலா துறையை அது பெரிதும் பாதிக்குமென , அத்தீவின் சுற்றுலா தொழில்துறையினர் கண்டனத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். விரும்புகிறோமோ இல்லையோ லங்காவியிற்கு அனைத்துலக சுற்றுப் பயணிகளைக் கவர்வதில் மது ஒரு சுற்றுலா ஈர்ப்பாக உள்ளது. வரி தீர்வையற்ற ஒரு தீவு எனும் தோற்றத்திற்கு ஏற்பவும் அது அமைந்திருக்கின்றது. எனவே, மதுவிற்பனையைத் தடை செய்வது வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை விரட்டுவதற்கு சமமாகுமென , கெடா மாநில மலேசிய தங்கும் விடுதிகள் சங்கம் கூறியுள்ளது. மேலும், சுற்றுப் பயணிகள் மட்டுமல்ல , தங்கும் விடுதிகள் துறையில் வெளிநாட்டு முதலீடுகளையும் அது தடுத்து விடும். சுற்றுலா துறையும் பாதிக்கப்பட்டு அந்நிய முதலீடும் குறைந்தால், இறுதியில் சுற்றுலா துறையை நம்பியிருக்கும் உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்புகளும் பறிபோகுமென அச்சங்கம், அச்சத்தை வெளிப்படுத்தியது.