சென்னை, செப்டம்பர்-25 – லட்டு தொடர்பாக தாம் பேசிய பேச்சுக்கு தமிழ் நடிகர் கார்த்தி, ஆந்திர மாநில துணை முதல் அமைச்சர் பவன் கல்யாணிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
“நான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். வெங்கடேஷ்வராவின் பக்தனாக நமது கலாச்சாரத்தை எப்போதும் கடைப்பிடிப்பேன் என, தனது X தளப் பக்கத்தில் கார்த்தி பதிவிட்டுள்ளார்.
கார்த்தி, அரவிந்த்சாமி நடித்துள்ள ‘மெய்யழகன்’ படத்தை விளம்பரம் செய்வதற்காக படக்குழு ஹதராபாத் சென்றிருந்த போது, மேடையில் கார்த்தி பேசியிருந்தது முன்னதாக சர்ச்சையானது.
நிகழ்ச்சி தொகுப்பாளர், கார்த்தியிடம், “லட்டு வேண்டுமா?”என நகைச்சுவையாகக் கேட்க, அதற்கு கார்த்தி, “லட்டு இப்போது உணர்ச்சிப்பூர்வமான விஷயம். அதைப் பற்றி பேசாதீர்கள்” என்று கூறினார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் அதற்கு கண்டனம் தெரிவித்தார்.
லட்டு விவகாரத்தில் கிண்டல் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது; யாராக இருந்தாலும் பார்த்துப் பேச வேண்டுமென, கார்த்தியின் பெயரைக் குறிப்பிடாமல் பவண் எச்சரிக்கும் தோரணையில் பேசியிருந்தார்.
திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டது உறுதிச் செய்யப்பட்டதை அடுத்து, ஏழுமலையானிடம் மன்னிப்புக்கோரி 11 நாள் பரிகார பூஜையை பவண் கல்யாண் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.