
பத்தாம், ஆகஸ்ட்டு 31 – இந்தோனேசியாவில், நூற்றுகணக்கானோர் பாதிக்கப்பட காரணமான, Love Scam – இணைய காதல் மோசடி கும்பலின் நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டன.
அந்த மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் என நமப்படும், டஜன் கணக்கான சீன நாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை, பத்தாமிலுள்ள, தொழிற்பேட்டை பகுதி ஒன்றிலிருந்து, 83 சீன ஆடவர்களும், ஐந்து பெண்களும் கைது செய்யப்பட்டதை இந்தோனேசிய போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அக்கும்பல், நூற்றுக்கணக்கான சீன மக்கள் குறிப்பாக பொதுச் சேவை ஊழியர்களிடமிருந்து பணம் பறித்துள்ளது தெரிய வந்துள்ளது.
அக்கும்பலால், இந்தோனேசியர்கள் யாரும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய விசாரணை தொடர்கிறது.
அப்படி யாரும் இல்லையென்றால், அந்த மோசடிக்கு பின்னணியில் செயல்பட்ட முக்கிய நபர் சீனாவுக்கு நாடு கடத்தப்படுவான் என இந்தோனேசிய போலீசார் கூறியுள்ளனர்.
வீடியோ அழைப்பின் வாயிலாக ஒருவரை தொடர்புக் கொண்டு, பாலியல் சேட்டைகளை புரியச் சொல்லி, அதனை ஒளிப்பதிவுச் செய்து, சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்போவதாக மிரட்டும் யுக்தியை அக்கும்பல் கையாண்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முன்னதாக, சீன அரசாங்கம் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளை அடுத்து, Love Scam மோசடி கும்பல் உறுப்பினர்கள் இந்தோனேசியாவுக்கும், இதர தென்கிழக்காசிய நாடுகளுக்கும் படையெடுத்துள்ளதாக இதற்கு முன் செய்திகள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.