
லாஸ் ஏஞ்சலஸ், ஜனவரி-17,அமெரிக்கா, லாஸ் ஏஞ்சலஸில் வரலாறு காணாத காட்டுத் தீயால் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், குறைந்தது ஒரு வாரத்திற்கு வீடுகளுக்குத் திரும்பக் கூடாதென உத்தரவிடப்பட்டுள்ளது.
மின்கசிவு, நிலச்சரிவு மற்றும் நச்சுப் பொருட்களின் தாக்கம் உள்ளிட்ட அச்சங்களால் அவ்வுத்தரவு வெளியாகியுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்புக் கருதியே அவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், வீடுகளுக்குத் திரும்ப முடியாத விரக்தியில் பல்லாயிரக்கணக்கானோர் கோபமடைந்துள்ளனர்.
WhatsApp குழுக்கள் வாயிலாக அதிகாரிகள் மீதான தங்களின் ஆதங்கங்களை அவர்கள் கொட்டித் தீர்ப்பதாகக் கூறப்படுகிறது.
கோரத் தாண்டவமாடிய காட்டுத் தீயில் இதுவரை 16,000 ஹெக்டர் நிலப்பரப்பு கருகியிருக்கிறது.
இந்நிலையில் மக்களை வீடுகளுக்குத் திரும்ப அனுமதிப்பது மிகவும் ஆபத்தானது என்பதே அதிகாரிகளின் வாதமாக உள்ளது.
“எரிவாயு மற்றும் கழிவுநீர் பாதைகள் சேதமடைந்துள்ளன, எல்லா இடங்களிலும் நச்சு கழிவுகள் உள்ளன”
எனவே மக்கள் அதிருப்தியடைந்தாலும் அவர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியமென, லாஸ் ஏஞ்சலஸ் போலீஸ் கூறியது.
காட்டுத் தீயில் இதுவரை 25 உயிர்கள் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.