
புத்ராஜெயா, நவ 2 – DAP யின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் 2019ஆம்
ஆண்டு 1எம்டிபி ஊழல் தொடர்பாக எழுதிய கட்டுரை தொடர்பில் அவருக்கு எதிராக சட்டத்துறையின் முன்னாள் தலைவர் எப்பெண்டி அலி தொடுத்திருந்த அவதூறு வழக்கின் முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. கடந்த ஆண்டு மே 23 ஆம் தேதியன்று எப்பெண்டி அலியின் தாக்கல் செய்திருந்த வழக்கை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. அந்த வழக்கை உயர்நீதிமன்றம் நிராகரித்ததில் உயர்நீதிமன்றம் சட்டத்திலோ அல்லது உண்மைகளிலோ தவறு செய்யவில்லை என்று மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு தலைமை தாங்கிய மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஹடாரியா தெரிவித்தார்.
வழக்கைத் தடுக்க, நியாயப்படுத்துதல் மற்றும் நியாயமான கருத்து ஆகியவற்றின் சட்டப் பாதுகாப்பை வெற்றிகரமாக எழுப்பியுள்ளார் என நீதிபதிகள் M. குணாளன் மற்றும் அஸ்மி அரிஃபின் ஆகியோருடன் மேல் முறையீட்டு நீதிமன்ற அமர்வுக்கு தலைமையேற்றிருந்த நீதிபதி ஹடாரியா சையட் இஸ்மாயில் தமது தீர்பில் தெரிவித்தார். அதோடு லிம் கிட் சியாங்கிற்கு எதிராக செலவுத் தொகையாக 100,000 ரிங்கிட் வழங்கும்படியும் எப்பெண்டி அலிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.