லீப்பிஸ் , ஆக 6 – மீன் பிடிக்கும் நடவடிக்கைக்கு சென்ற ஏழு நண்பர்கள் முகாமிட்டிருந்த கூடாரம் மீது மரம் விழுந்து ஒருவர் மரணம் அடைந்தார். இந்த துயரச் சம்பவம் லிப்பிஸ் (Lipis) Kampung Pagar Sasak -கிலுள்ள Lubuk Beriang -கில் நிகழ்ந்தது. நேற்று காலையில் அந்த நண்பர்கள் தங்கியிருந்த கூடாரம் மீது அவர்கள் யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென மரம் விழுந்ததில் 54 வயதுடைய முகமட் அஸ்லியானா அலியாஸ் ( Mohd. Azliana Alias) மரணம் அடைந்தார். பயங்கர சத்தம் கேட்டு அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் தாங்கள் தங்கியிருந்த கூடாரத்தின் மீது மரம் விழுந்ததாக இச்சம்பவத்தில் உயிர்தப்பியவர்களில் ஒருவரான முகமட் பாமி மூசா (Muhammad Fahmi Musa) தெரிவித்தார். உடலில் பல இடங்களில் காயத்திற்குள்ளான முகமட் அலியாஸ் கோலாலிப்பீஸ் மருத்துவமனையில் இறந்தார்.
அந்த சம்பவத்தில் கால் முறிவுக்கு உள்ளான 44 வயதுயை சுல்கிப்ளி அமான்
( Dzulkefli Aman ) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் நாங்கள் எவரும் எந்தவொரு பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்று நினைத்தோம். கூடாரங்களை எடுத்தபோதுதான் எங்களது நண்பர்களில் இருவர் வலியால் துடிப்பதை உணர்ந்தோம் என முகாட் பாமி கூறினார். வானிலை நன்றாக இருந்ததோடு மழை பெய்யவில்லை , மற்றும் பலமான காற்றும் வீசாத சூழ்நிலையில் அந்த துரதிஷ்ட சம்பவம் நிகழ்ந்ததாக அவர் வேதனையோடு தெரிவித்தார். தாங்கள் முகாமிட்ட இடத்தில் தொலைபேசி தொடர்பு கிடைக்காத காரணத்தினால் உடனடியாக உதவி கிடைப்பதில் சிரமத்தை எதிர்நோக்கியதாகவும் பாமி மூசா கூறினார். எங்களில் மூன்று பேர் இரண்டு கிலொமீட்டர் தூரம் நடந்து காட்டை கடந்து சென்று போலீஸ் மற்றும் தீயணைப்பு படையின் உதவியை நாடினோம் என அவர் கூறினார்.