பெய்ரூட், நவம்பர்-15 – லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா தரப்பின் பிடியிலுள்ள பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இஸ்ரேல் வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அதில் தென் பெய்ரூட்டின் புறநகர் பகுதிகளில் ஐவர் கொல்லப்பட்டதாக, லெபனானிய தேசிய செய்தி நிறுவனம் கூறியது.
இரவு நேரங்களில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் கட்டடங்களும் மக்களின் இருப்பிடங்களும் கடும் சேதமடைந்தன.
வானமும் ஒரே புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
இஸ்ரேல் – ஹெஸ்புல்லா தரப்புகளுக்கு இடையே மோதல் தொடங்கியதிலிருந்து, இஸ்ரேல் நடத்தியத் தாக்குதல்களில் 3,365 கொல்லப்பட்டு, 14,344 பேர் காயமடைந்திருப்பதாக லெபனான் சுகாதார அமைச்சு கூறுகிறது.
காசா முனையில் ஏற்கனவே ஓராண்டாக எல்லைப் போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல், செப்டம்பர் மாதக் கடைசியிலிருந்து ஈரான் ஆதரவிலான ஹெஸ்புல்லா தரப்புக்கு எதிராக பேரளவிலான தாக்குதல்களை நடத்தி வருகிறது.