பெய்ரூட், செப்டம்பர் -18,மத்தியக் கிழக்கு நாடான லெபனான் முழுவதும் கையடக்க தொடர்புக் கருவியான பேஜர்கள் (pager) வெடித்ததில் 9 பேர் உயிரிழந்த வேளை, 2,750 பேர் காயமுற்றனர்.
மரணமடைந்தவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகனும் அடங்குவார்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அச்சம்பவத்திற்கு இஸ்ரேலே காரணம் என ஹிஸ்புல்லா ஆயுதத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில்,பேஜர்கள் வைத்திருப்பவர்கள் உடனடியாக அவற்றை வெளியே வீசி எறிய வேண்டுமென்றும், அதனை பயன்படுத்த வேண்டாம் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லெபனான் நாட்டில் இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா ஆயுதத் தரப்பு தகவல் தொடர்புக்காக பேஜர்களை பயன்படுத்தி வருகிறது.
கடந்தாண்டு அக்டோபர் முதல் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுடன் போர் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.