
புதுடில்லி, ஆக 24 – நிலவின் தென்துருவத்தை தொட்ட முதல் நாடு என்ற சாதனையைப் படைத்த இந்தியாவுக்கு அமெரிக்க, ரஷ்யா உட்பட உலக நாடுகள் இந்தியாவை தொடரந்து பாராட்டி வருகின்றன.
நிலவில் தரையிறங்கிய நாடுகளின் பட்டியலில் இப்போது நான்காவதாக இந்தியாவும் சேர்ந்து கொண்டுள்ளது .
மிகக்குறைந்த செலவில் வெற்றிகரமாக நிலவுப் பயணத்தை செய்து சாதனை நிகழ்தியிருக்கின்ற இந்தியாவை உலகமே தற்போது திரும்பி பார்க்கிறது.
சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் வெற்றிகரமாக தரையிறங்கிய 6 மணி நேரத்திற்குப் பின் நிலவின் தரையை பிரக்யான் ரோவர் தொட்டது.
இஸ்ரோ விஞ்ஞானிகளின் சீரிய பணியினால் லேண்டரின் வயிற்றுப் பகுதியிலிருந்த ரோவர் சில மணி நேரங்களில் வெளியேறியது. இது விஞ்ஞானிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 14 நாட்களுக்கு ரோவர் நிலவின் தரைப்பகுதியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
லேண்டர் தரையிறங்கியபோது , நிலவில் புழுதி படலம் ஏற்பட்டது. அது அடங்கிய பின்னர் லேண்டரில் இருந்து ரோவர் வெளிவந்து தனது ஆய்வுப் பணியை தொடங்கியுள்ளது. நிலவில் பல்வேறு தகவல்களை துல்லியமாக அறிந்துகொள்வதற்கு ரோவரின் ஆய்வுப் பணி அமையவிருக்கிறது.
சந்திரயான் – விண்கலத்தின் மொத்த எடையில் 26 கிலோ மட்டுமே எடையுள்ள சிறிய ரோவர் மேற்கொள்ளும் ஆய்வுப் பணிகளின் மூலம் மனுக்குலத்திற்கு பல அரிய தகவல்களை கொடுக்கப்போகிறது.