
மலாக்கா, அலோர் காஜாவிற்கு அருகில், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், தென் மாநிலங்களை நோக்கி செல்லும் வழியில், MPV பல்நோக்கு வாகனம் ஒன்று, லோரியின் பின்புறத்தை மோதி விபத்துக்குள்ளானதில், சீலாட் போட்டியின் பங்கேற்பாளர்கள் அறுவருடன் அதன் பயிற்றுனரும் காயமடைந்தார்.
அதிகாலை மணி 5.10 வாக்கில் நிகழ்ந்த அவ்விபத்தில், காயமடைந்த 16 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட பயிற்சியாளர்களும், 36 வயது பயிற்றுனரும் உடனடியாக அலோர் காஜா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கோலாலம்பூர், அரா டமான்சாராவில் நடைபெற்ற சீலாட் தற்காப்பு கலை போட்டியில் பங்கேற்ற பின்னர், அவர்கள் அனைவரும் ஜொகூர் திரும்பிக் கொண்டிருந்த போது அவ்விபத்து நிகழ்ந்தது.
சம்பவ இடத்தை அடைந்ததும், பயிற்றுனர் செலுத்திய புரோட்டோன் எக்சோரா ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, லோரியின் பின்புறத்தை மோதி விபத்துக்குள்ளான போதிலும், லோரி ஓட்டுனர் நிற்காமல் சென்றுவிட்டதால், அதன் பதிவு எண்ணை அடையாளம் காண முடியவில்லை என அலோர் காஜா போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அர்சாட் அபு தெரிவித்தார்.