கோலாலம்பூர், பிப் 21 – சமூக நலத் துறையின் பராமரிப்பில் இருக்கும் லொ சியு ஹொங் -கின் 3 பிள்ளைகளையும், உடனடியாக விடுவித்து அவரது தாயாரிடமே ஒப்படைக்கும்படி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லோ சியு ஹொங் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவை ஏற்றுக் கொண்ட பின்னர், நீதிபதி Collin Lawrence Sequerah, அந்த தீர்ப்பினை வழங்கினார்.
தனது 3 பிள்ளைகளையும் பராமரிக்கவும் அவர்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும் லோ சியு ஹொங் ஏற்கனவே நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளார்.
அந்த உத்தரவு இன்னும் செல்லுபடியாகும் பட்சத்தில் , லோ செய்திருக்கும் ஆட்கொணர்வு மனுவை ஏற்றுக் கொள்வதாக நீதிபதி தெரிவித்தார். அந்த முடிவினைக் கேட்டு, பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த லோ சியு ஓங் அழுததைக் காண முடிந்தது.
இவ்வேளையில், லோ சியு ஓங், தனது குழந்தைகளுடன் மீண்டும் ஒன்றிணைய உதவிய மலேசிய தமிழர் குரல் அமைப்பு, லோவின் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
இனி பிள்ளைகளின் மதம் மாற்றம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து லோ முடிவு செய்வாரென , அவ்வமைப்பின் தலைவர் டேவிட் மார்ஷெல் தெரிவித்தார்.