
புத்ராஜெயா, ஏப்ரல்-9, லோ சியூ ஹோங் என்ற மாதுவின் 3 பிள்ளைகளை மீண்டும் இஸ்லாத்திற்கே மதம் மாற்றக் கோரி பெர்லிஸ் அரசாங்கம் செய்திருந்த விண்ணப்பத்தை, புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
விண்ணப்பத்தாரரின் மனுவில் எந்தவொரு முகாந்திரமும் இல்லையெனக் கூறி, மலாயா தலைமை நீதிபதி டத்தோ ஸ்ரீ ஹஸ்னா மொஹமெட் ஹஷிம் தலைமையிலான மூவரடங்கிய நீதிபதி குழு அத்தீர்ப்பை வழங்கியது.
சியூ ஹோங்கின் 3 பிள்ளைகளும் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டதை, மேல்முறையீட்டு நீதிமன்றம் ஜனவரி 10-ஆம் தேதி இரத்துச் செய்து, மூவரும் இந்துக்களே என தீர்ப்பளித்தது.
அதனை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் முறையிட பெர்லிஸ் அரசாங்கம் செய்திருந்த விண்ணப்பம் அப்போதே நிராகரிக்கப்பட்டது.
அம்முடிவானது, மேல்முறையீடு செய்ய தங்களுக்கிருக்கும் உரிமையைப் பறிப்பதாகும் எனக் கூறி பெர்லிஸ் சார்பில் செய்யப்பட்ட மறு விண்ணப்பத்தில் தான் இந்த தீர்ப்பு வந்துள்ளது.
பெர்லிஸ் அரசாங்கத்துக்கு இருந்த கடைசி வாய்ப்பு இதுவாகும்.
இந்துக்களான தனது 3 பிள்ளைகளை தாயான தனது அனுமதிப் பெறாமல், தனது முன்னாள் கணவர் எம். நாகாஷ்வரா இஸ்லாத்துக்கு மதம் மாற்றியது செல்லாது எனக் கூறி 37 வயது சியூ ஹோங் சட்டம் போராட்டம் நடத்தி வந்தார்.
அவ்வகையில் சமூக நலத்துறையின் பாதுகாப்பிலிருந்த 3 பிள்ளைகளும், சியூ ஹோங் செய்திருந்த habeas corpus ஆட்கொணர்வு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு, 2022 பிப்ரவரியில் அவரிடமே ஒப்படைக்கப்பட்டனர்.