ஈப்போ, டிசம்பர்-12 – மாணவிக்கு உடல் ரீதியாக பாலியல் தொல்லை கொடுத்ததாக, பள்ளிப் புறப்பாட துணைத் தலைமையாசிரியர் ஒருவர் ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டார்.
எனினும் தம் மீதான 2 குற்றச்சாட்டுகளையும் 37 வயது தே ச்சாவ் தெய்க் (The Chau Teik) மறுத்து விசாரணைக் கோரினார்.
செப்டம்பர் 11-ஆம் தேதி காலை 6.40 மணிக்கு ச்செமோர் (Chemor) அருகே, பண்டார் பாரு ஸ்ரீ கிளேபாங்கில் உள்ள ஆரம்பப் பள்ளியில் அவர் முதல் குற்றத்தைப் புரிந்துள்ளார்.
வகுப்பறையில் 12 வயது மாணவியை பின்னாலிருந்து கட்டிப் பிடித்து, உதட்டில் முத்தம் கொடுத்ததாக முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
பின்னர் செப்டம்பர் 26-ஆம் தேதி, அதே பள்ளியில், அதே மாணவியிடம், ஆனால் வேறு வகுப்பறையில், அதே காரியத்தைச் செய்ததாக, இரண்டாவது குற்றச்சாட்டை அவ்வாடவர் எதிர்நோக்கியுள்ளார்.
இரு குற்றச்சாட்டுகளும் 2017 சிறார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பிரம்படியும் விதிக்க அச்சட்டம் வகை செய்கிறது.
அதே சட்டத்தின் 16-ஆவது பிரிவுடன் சேர்த்தே குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டதால், கூடுதலாக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் குறைந்தது 2 பிரம்படிகள் விதிக்கப்படவும் வாய்ப்புண்டு.
7,000 ரிங்கிட் ஜாமீனில் அவரை விடுவித்த நீதிமன்றம், ஜனவரி 17-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென்றது.