கோலாலம்பூர், ஆகஸ்ட்-13, கலவர பூமியாக மாறிய வங்காளதேசத்தில் இந்துகள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறைச் சம்பவங்களை மலேசியா ஏன் இன்னும் கண்டிக்கவில்லையென, பேராசியர் டாக்டர் பி.ராமசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.
சிறுபான்மையினர் குறிப்பாக இந்துக்கள் மீதான தாக்குதளைக் கண்டித்து உலக நாடுகள் எல்லாம் அறிக்கை வெளியிட்டு விட்டன; ஆனால் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்னும் அவ்வாறு செய்யாமலிருப்பது ஏமாற்றமளிப்பதாக, உரிமைக் கட்சியின் இடைக்கால தலைவருமான அவர் சொன்னார்.
பல்லின மக்களைக் கொண்ட மலேசியாவுக்குப் பிரதமர் என்ற முறையில், அன்வார் வங்காளதேசத்தில் நடக்கும் அட்டூழியங்கள் குறித்து அந்நாட்டு இடைக்கால அரசிடம் கண்டனம் தெரிவிக்க வேண்டுமென ராமசாமி வலியுறுத்தினார்.
இடைக்கால அரசின் தலைவராக முஹமட் யூனூஸ் பதவியேற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்த அன்வாருக்கு, அங்கு நடக்கும் அநியாயம் குறித்து கவலைத் தெரிவிக்கவும் உரிமையுண்டு என்றார் அவர்.
இவ்வேளையில், வங்காளதேச கலவரங்கள் குறித்து DAP, PKR கட்சித் தலைவர்களும் அமைதிக் காப்பதை ராமசாமி சாடினார்.
காலங்காலமாக மனித உரிமைக்கு ஆதரவாக நிற்பவர்கள் என தங்களைக் காட்டிக் கொண்டவர்களுக்கு, தற்போது வங்காளதேசத்தில் நடக்கும் தாக்குதல்கள் கண்களுக்குத் தெரியவில்லை போலும் என DAP முன்னாள் தலைவருமான அவர் காட்டமாகக் கேட்டார்.
முஸ்லீம் நாடான வங்காளதேசத்தில் அண்மைய அரசியல் கலவரங்களை அடுத்து, இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதும் வன்முறை தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள், வீடுகள், வணிகத்தளங்கள் உள்ளிட்டவையும் வன்முறையாளர்களால் குறி வைக்கப்பட்டுள்ளன.
வன்முறைகளைத் தடுத்து நிறுத்தி சிறுபான்மையினர் நலம் காத்திட வங்காளதேச இடைக்கால அரசு முயற்சிகளை எடுக்க வேண்டுமென பரவலாகக் கோரிக்கை எழுந்துள்ளது.