புத்ராஜெயா, செப்டம்பர்-18 – KLIA-வில் முறைப்படி குடிநுழைவுச் சோதனைக்கு உட்படுத்தாமல்
வெளிநாட்டவர்களை கடத்தி வரும் கும்பல், வெவ்வேறு நாட்டினருக்கு வெவ்வேறு குறியீட்டுப் பெயர்களைப் ( code names ) பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
வங்காளதேசிகளுக்கு ‘school boy’, மியன்மார் நாட்டவர்களுக்கு ’Junta’, இந்தியாவிலிருந்து வருவோருக்கு ‘soya sauce’ அல்லது ‘roti canai’ என குறியீட்டுப் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சீனப் பிரஜைகளுக்கு ‘Orange’, வியட்நாமியர்களுக்கு ‘lychee’ அல்லது ‘Nguyen’, பாகிஸ்தானியர்களுக்கு ‘carpet’, இந்தோனீசியர்களுக்கு ‘salak என்ற குறியீட்டுப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.
மலேசிய ஊழல் தடுப்பாணையத்தின் (MACC) தலைமை ஆணையர் Tan Sri Azam Baki அதனை அம்பலப்படுத்தினார்.
அவ்வாறு சட்டவிரோதமாக அழைத்து வரப்படும் வெளிநாட்டவர்களில் ஆக ‘விலையுயர்ந்தவர்களாக’ வங்காளதேசிகளே விளங்குகின்றனர்.
உள்நாட்டுக்குள் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு வங்காளதேசிக்கும், கடமைத் தவறும் குடிநுழைவு அதிகாரிகள் தலைக்கு 2,500 ரிங்கிட்டை லஞ்சமாகப் பெறுகின்றனர்.
மியன்மார் நாட்டவர்களுக்கு 1,500 ரிங்கிட்டும், பாகிஸ்தானியர்களுக்கு 1,300 ரிங்கிட்டும், இந்தியப் பிரஜைகளுக்கு தலா 800 ரிங்கிட்டும் லஞ்சமாகப் பெறப்படுகிறது.
ஆகக் குறைவாக இந்தோனீசியர்களிடமிருந்து தலா 300 ரிங்கிட் வசூலிக்கப்படுகிறது.
லஞ்சப் பணம் ரொக்கமாகவும், ஒருவருக்கு ஒருவர் என நேரடியாகக் கைமாறுவதும் கண்டறியப்பட்டதாக , Azam Baki சொன்னார்.