டாக்கா, ஆகஸ்ட்-7, வங்காளதேசத்தில் நள்ளிரவில் அமைந்துள்ள இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக நோபல் பரிசு வெற்றியாளரான முகமது யூனோஸ் (Mohammad Yunus) நியமிக்கப்பட்டுள்ளார்.
மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நடத்தியச் சந்திப்புக்குப் பிறகு வங்காளதேச அதிபர் அந்த உத்தரவை வெளியிட்டார்.
பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிய அடுத்த நாள் அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது.
பெரிதும் மதிக்கப்படும் சமூகப் போராளி, வங்கியாளர், பொருளாதார மேதை, சிவில் சமூகத் தலைவர் என பன்முகம் கொண்ட 74 வயது யூனோஸ் தான் இடைக்கால அரசுக்குத் தலைமையேற்ற வேண்டுமென மாணவர் அமைப்பினர் முன்னதாக வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில் ஹசீனாவின் பதவி விலகலுக்குப் பிறகும் வங்காளதேசத்தில் ஆர்ப்பாட்டங்கள் ஓய்ந்தபாடில்லை.
அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தற்போது சிறுபான்மையினரைக் குறி வைத்து திசைத் திரும்பியுள்ளன.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களும் இளைஞர் அமைப்பினரும் அணி திரண்டு இந்து கோவில்கள், தேவாலயங்கள் போன்றவற்றில் பாதுகாப்பு வளையத்தை எழுப்பியுள்ளனர்.
குறிப்பாக இந்து ஆலயங்களுக்கு வெளியே அவர்கள் பாதுகாப்பு அரணாக நின்றிருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.
சிறுபான்மையினர் குறி வைக்கப்படுவது, அவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு தீ வைக்கப்படுவது போன்ற சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்; இல்லையேல் வங்கதேசம் வரலாறு காணாத சேதத்தைச் சந்திக்கும் என சிறுபான்மையினர் அமைப்புகள் எச்சரித்துள்ளன