புது டெல்லி, அக்டோபர்-13,
இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பை வங்காளதேச அரசாங்கம் உறுதிச் செய்ய வேண்டுமென, இந்தியா வலியுறுத்தியுள்ளது.
நவராத்திரியை ஒட்டி வங்காளதேசத்தின் பல்வேறு கோயில்களில் இந்துக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தலைநகர் டாக்காவில் தண்டி பஜார் எனுமிடத்தில் அமைக்கப்பட்ட துர்கா பூஜை மண்டபம் தாக்கப்பட்டது.
அதே சமயம் சக்திரா நகரில் ஜெஷோரேஸ்வரி காளி கோயிலில் உள்ள அம்மனுக்கு வழங்கப்பட்ட கிரீடம் திருடுபோனது.
இந்து கோயில்களையும் தெய்வங்களையும் இழிவுப்படுத்தும், சேதப்படுத்தும் இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள், கடந்த பல நாட்களாகவே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நவராத்திரி போன்ற புனிதமான விழாக் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது மிகுந்த கவலையையும் வருத்தத்தையும் அளிப்பதாக இந்திய வெளியுறவுத் துறை கூறியது.
இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்;
இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை வங்கதேச அரசாங்கம் உறுதிச் செய்ய வேண்டுமென இந்தியா வலியுறுத்தியது.
முஸ்லீம் நாடான வங்காளதேசத்தில் நவராத்திரி துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்கு எதிராக 35 விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துள்ளன.
17 பேர் கைதுச் செய்யப்பட்டு, 10-க்கும் மேற்பட்ட வழக்குகளை டாக்கா போலீஸ் பதிவுச் செய்துள்ளது.