டாக்கா, ஆகஸ்ட்-14 – வங்காளதேசத்தில் கடந்த மாதம் வெடித்த பெரும் வன்முறை தொடர்பில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வாஜீட் மீது, நீதிமன்றத்தில் கொலை வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
வன்முறையின் போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மளிகைக் கடைக்காரர் கொல்லப்பட்டது தொடர்பாக, அவ்வழக்குப் பதிவானது.
வழக்கறிஞர் ஒருவர் தொடுத்த பொதுநல வழக்கை ஏற்றுக் கொண்ட டாக்கா நீதிமன்றம், ஹசீனாவுடன் அவரது அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக இருந்தவர், அப்போதைய போலீல் படைத் தலைவர் உள்ளிட்ட 6 முக்கிய உயரதிகாரிகளுக்கு எதிராக கொலை விசாரணையைத் தொடங்குமாறு போலீசுக்கு உத்தரவிட்டது.
இதனால் மிக விரைவிலேயே அந்த 7 பேருக்குமெதிராக குற்றவியல் விசாரணைத் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
வங்காளதேசத்தில் முதலில் அரசாங்க வேலைக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் தொடங்கிய மாணவர் போராட்டம், பிறகு மெல்ல ஷேக் ஹசீனாவுக்கு எதிராகத் திரும்பியது.
நிலைமை கட்டுப்பாட்டை மீறவே, ஹசீனா பதவி விலகி அங்கிருந்து தப்பி தற்காலிகமாக இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
நோபல் பரிசு வெற்றியாளர் முகமது யூனூஸ் தலைமையில் அங்கு இடைக்கால அரசாங்கம் அமைந்துள்ள நிலையில், ஹசீனா மீது அடுக்கடுக்கான வழக்குகள் பாயலாமென எதிர்பார்க்கப்படுகிறது.