கோலாலம்பூர், டிசம்பர்-18 – வங்சா மாஜூ டோல் சாவடி அருகே SPE நெடுஞ்சாலையின் 18.1-வது கிலோ மீட்டரில் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்த SUV ரக Mercedes Benz GLE450 காரின் உரிமையாளர், இன்று கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
வியாபாரியான அவர், கண்மூடித்தனமாக காரை ஓட்டி, ஒரு மோட்டார் சைக்கிளோட்டிக்கு படுகாயம் விளைவித்ததாக முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறையும், 5,000 முதல் 15,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்படலாம்; அதோடு வாகனமோட்டும் உரிமமும் ஐந்தாண்டுகளுக்கு இரத்துச் செய்யப்படும்.
மோட்டார் சைக்கிளை மோதி விட்டு நிற்காமல் சென்றதாக இரண்டாவது குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
அக்குற்றத்திற்கு அதிகபட்சம் 2,000 ரிங்கிட் அபராதம் அல்லது 6 மாத சிறை விதிக்கப்படலாம்.
எனினும், 34 வயது Sum Kah Fei அவ்விரு குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணைக் கோரினார்.
இதையடுத்து 6,000 ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
வழக்கு அடுத்தாண்டு பிப்ரவரி 24-காம் தேதி செவிமெடுப்புக்கு வருகிறது.
ஞாயிற்றுக் கிழமை மதியம் நிகழ்ந்த அச்சம்பவம் முன்னதாக வைரலானது குறிப்பிடத்தக்கது.