
ஜொகூர் பாரு, செப்டம்பர் 19 – வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், வட மாநிலங்களை நோக்கி செல்லும் பாதையில், பண்டான் ஓய்வுப் பகுதிக்கு அருகே, மூன்று வாகனங்களை உட்படுத்திய விபத்தில், லோரி ஓட்டுனர் ஒருவர் படுகாயமடைந்தார்.
நேற்று மாலை மணி 3.37 வாக்கில் அவ்விபத்து நிகழ்ந்தது.
62 வயது பெண் ஓட்டிச் சென்ற ஹோண்டா சிட்டி காரின் பின்புறம், ஒரு டன் எடைக் கொண்ட லோரி மோதியதாக நம்பப்படுவதாக, தீயணைப்பு மீட்புப் துறையின் நடவடிக்கை பிரிவு கொமாண்டோ நோர் அஜ்ஹான் அஹ்மட் தெரிவித்தார்.
அதனால், கட்டுப்பாட்டை இழந்த ஹோண்டா சிட்டி கார், முன்னே பயணித்த புரோட்டோன் சாகா காரை மோதித் தள்ளியது.
அவ்விபத்தில், புரோட்டோன் சாகா காரை செலுத்திய 45 வயது ஆடவரும், ஹோண்டா சிட்டி ஓட்டுனரும் காயம் எதுவும் இன்றி தப்பினர்.
எனினும், விபத்தின் தாக்கத்தால், லோரியின் முன்புற கேபின் நசுங்கியதால், லோரி ஓட்டுனர் அதில் இருந்து வெளியேற முடியாமல் பலத்த காயங்களுக்கு இலக்கானார்.
தீயணைப்பு மீட்புப் படையினர் உதவியோடு மீட்கப்பட்ட அவர் பின்னர் ஆம்புலன்ஸ் வாயிலாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.