
கடன் பெற்றவர்களிடமிருந்து, 100 விழுக்காட்டுக்கும் அதிகமான வட்டியை வசூலித்து, வட்டி முதலை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும், 53 வயது பி.தேவகிக்கும், அவரது மகளான 25 வயது எம். தாஞ்சினிக்கும் எதிராக இன்று அலோர் காஜா, மாஜிஸ்திரேட், செஷன்ஸ் நீதிமன்றங்களில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், தங்களுக்கு எதிரான அந்த குற்றச்சாட்டை மறுத்து அவர்கள் விசாரணை கோரினர்.
தனித்து வாழும் தாயாரான தேவகி, 41 வயது A Francis Xavier மற்றும் 26 வயது S C Ramai-க்கு, கடனாக கொடுத்த நான்காயிரம் ரிங்கிட்டிக்கு, எட்டாயிரத்து 250 ரிங்கிட் வட்டி வசூலித்ததாக கூறப்படுகிறது.
கடந்தாண்டு ஜூலைக்கும் இவ்வாண்டு மார்ச் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் அக்குற்றத்தை புரிந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்ததாக, தாஞ்சினி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
தேவகியை எட்டாயிரம் ரிங்கிட் உத்தரவாத் தொகையிலும், தாஞ்சினியை ஐயாயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும் விடுவிக்க நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. இவ்வழக்கு விசாரணை ஜூலை பத்தாம் தேதி செவிமடுக்கப்படும்