துபாய், ஏப்ரல்-19, ஐக்கிய அரபு சிற்றரசில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பாதிப்புகள் நீடிக்கின்றன.
ஏராளமான முக்கியப் பாதைகள் குறிப்பாக துபாய் அனைத்துலக விமான நிலையம் போகும் பாதைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.
தடைப்பட்ட அனைத்து விமானப் பயணங்களையும் மீண்டும் இயக்க விமான நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
வெள்ளத்தில் மிதந்த துபாய் விமான நிலைய ஓடுபாதைகளில் துப்புரவுப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வேளையில் அந்நாட்டின் முக்கியச் சுற்றுலா தலங்களிலும் வெள்ளத்திற்குப் பிந்தைய சீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு செவ்வாய்க்கிழமை துபாயில் கொட்டித் தீர்த்த மழையால் அந்த பாலைவன தேசம் பெருவள்ளத்தில் மூழ்கியது.
ஏராளமான வீடுகளும் வணிக வளாகங்களும் அதில் கடும் சேதமடைந்துள்ளன.
வெள்ளப்பாதிப்பில் இருந்து சீக்கிரமே மீளும் முயற்சியில் ஐக்கிய அரபு சிற்றரசு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.