கோலாலம்பூர், அக்டோபர் 4 – வரலாற்றில் முதல் முறையாக இந்தியக் கூட்டுறவுக் கழகங்களுக்கான மாநாடு எதிர்வரும் அக்டோபர் 13ஆம் திகதி நடைபெறும் என தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவித்தார்.
நாட்டில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவுக் கழகங்கள் உள்ளன.
இதில் 419-க்கும் மேற்பட்ட கூட்டுறவுக் கழகங்கள் மட்டுமே இந்தியர்களுக்குச் சொந்தமானதாகும்.
இந்தக் கூட்டுறவுக் கழகங்களில் பல வெற்றிகரமாகச் செயல்பட்டு வந்தாலும், சில கழகங்கள் செயல்படாமல் செயலிழந்தும் உள்ளன.
இவைகளை ஒன்றிணைத்து, மலேசிய கூட்டுறவு கொள்கை 2023 குறித்தும், அறிவை பெருக்க வேண்டும் என்ற முதன்மை நோக்கில் இம்மாநாடு நடைபெறும் என்றார், அவர்.
இம்மாநாட்டில், நாட்டிலுள்ள பல்வேறு இந்திய கூட்டுறவுக் கழகங்களிலிருந்து 800க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்றார் அவர்.
கூட்டுறவுக் கழகங்களின் சவால்களையும் சிக்கல்களையும் கண்டறிதல், எதிர்கால இலக்குகளை திட்டமிடுதல் என அமர்வுகளை கொண்டு நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் இந்திய கூட்டுறவு கழகங்கள் கலந்து கொள்வது அவசியம் என துணையமைச்சரின் அரசியல் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் மற்றும் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் தெரிவித்தனர்.
இன்று இந்தியக் கூட்டுறவுக் கழகங்களுக்கான மாநாட்டின் சின்னத்தை டத்தோ ஸ்ரீ ரமணன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார்.
இம்மாநாடு வரும் அக்டோபர் 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரிக்பீல்ட்ஸ் பேங்க் ரக்யாட் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.