சைபர்ஜெயா, ஏப்ரல்-30 – வரி ஏய்ப்பு செய்வதாகக் கண்டறியப்படும் எந்தவொரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் சோதனையிட, உள்நாட்டு வருமான வரி வாரியம் LHDN-க்கு சட்டத்தில் அதிகாரம் உண்டு.
தேவைக்கு ஏற்ப அந்த அதிகாரத்தை LHDN பயன்படுத்தும் என அதன் தலைமை செயல் அதிகாரி Datuk Dr Abu Tariq Jamaluddin தெரிவித்தார்.
பல்வேறு தரப்புகளிடம் இருந்து பெறப்படும் தகவல்களைக் கொண்டு, அச்சோதனைகளை மேற்கொள்ள LHDN-னிடம் வழிவகைகள் இருப்பதாக அவர் சொன்னார்.
வரி ஏய்ப்பு சம்பவங்களில், தேவை ஏற்பட்டால் மட்டுமே சோதனையிடும் அளவுக்கு விவகாரம் செல்லும்; மற்றபடி பெரும் சிக்கல் இல்லை என்றால் வழக்கமான தணிக்கை முறையே பின்பற்றப்படும் என அவர் விளக்கினார்.
வரி ஏய்ப்பை முடிந்த வரை முறியடிக்க LHDN முயலும் என்றார் அவர்.
இவ்வேளையில் LHDN-னின் முன்னோடித் திட்டமான e-invoice முறை வரும் ஆகஸ்டில் அமுலுக்கு வரும் போது, ஆண்டுக்கு 100 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் வருமானம் ஈட்டும் 4,000 நிறுவனங்கள் முதல் குழுவாக அதில் பங்கெடுக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்த e-invoice முறை அடுத்தாண்டு ஜூலையில் முழுமையாக அமுலுக்கு வரவிருக்கின்றது.