பேங்கோக், செப்டம்பர் -1, தாய்லாந்தில் ஏராளமான நகைகளை அணிந்து Wonton மீ விற்று வந்த ஆடவர், தேவையில்லாமல் பிரச்னையில் சிக்கியுள்ளார்.
கழுத்தில் தங்கச் சங்கிலிகள் தொங்க, கைகளில் தங்கக் காப்புகள் மின்ன wonton மீ விற்றே கிராம மக்களிடத்திலும் நெட்டிசன்கள் மத்தியிலும் புகழடைந்தவர் தான் 57 வயது ரங்சான் (Rangsan) என்பவர்.
இந்நிலையில், அந்நாட்டு வருவாய் துறை விரைவில் தன்னை விசாரிக்கக் கூடுமென வெளியான தகவலால் ரங்சான் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது ஒன்றும் கள்ள சம்பாத்தியம் அல்ல; இத்தனை காலம் உழைத்து சம்பாதித்தப் பணத்தில் வாங்கியது என்றார் அவர்.
அப்படியே என்னை விசாரிக்க வந்தாலும், மடியில் கனமில்லாததால் பயப்பட ஒன்றுமில்லை என ரங்சான் தெரிவித்தார்.
ஒரு பாதுகாப்புக்காக வழக்கறிஞகோரிடமும் அவர் ஆலோசனைக் கேட்டுள்ளார்.
தனது அக்காவிடம் நிலத்தை விற்றுக் கிடைத்த பணத்தில் மலேசிய ரிங்கிட்டுக்கு 10,000 வெள்ளிக்கு தங்க நகைகளை அவர் வாங்கத் தொடங்கியிருக்கின்றார்.
கடந்த 32 ஆண்டுகளில் மீ விற்கும் தொழிலில் கிடைத்த வருமானத்தையும் சிறுகச் சிறுகச் சேமித்து மேலும் தங்க நகைகளை வாங்கியுள்ளார்.
அந்த நகைப் பிரியரிடம் தற்போது மொத்தமாக 375 கிராம் எடையில் 133,000 ரிங்கிட் மதிப்பிலான தங்க நகைகள் இருக்கின்றனவாம்.