
கோலாலம்பூர், நவ 7 – தங்களது வயது மற்றும் உடல் ஆரோக்கியத்தினால் வாழ்க்கை வருமானத்தை பெற முடியாத குடும்பங்களுக்காக மாதந்திர ரொக்க உதவித் தொகையை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராயவிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். மோசமான வறுமை நிலையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நேற்று தமது தலைமையிலான தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்ட மூன்று ஆலோசனைகளில் ரொக்க உதவியும் ஒன்றாகும் என அவர் கூறினார். இதுகுறித்த தரவுகளை மேம்படுத்துவதிலும் மறு ஆய்வு செய்வதிலும் அனைத்து நிறுவனங்களும் அமைச்சுகளும் ஈடுபடும் என்றும் அவர் கூறினார். மூன்று மாதங்களில் இத்திட்டத்தில் பங்கேற்பதற்கான குடும்பத்தினர்களை அனைத்து நிறுவனங்களும் அடையாளம் கண்டு பொருத்தமான திட்டத்தில் அவர்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என அன்வார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.