
கோலாலம்பூர், மார்ச் 15 – இந்நாட்டில் LGBT சமூகத்தினரை குறி வைத்திருக்கும் பாஸ் கட்சி , தனது வசமுள்ள மாநிலங்களான கிளந்தான், திரெங்கானுவில் நிலவும் பிரச்சனைகளில் முதலில் கவனம் செலுத்தும்படி, கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அண்மையில் கிளந்தானில் சிறார்களை உட்படுத்திய பாலியல் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாக, தலைமை நீதிபதி தெங்கு மைமூன் துவான் மாட் ( Tengku Maimun Tuan Mat ) தனது கவலையை வெளிப்படுத்தி இருந்தார் .
அதே வேளை, திரெங்கானுவில், 100 விழுக்காடு பூர்வீகக் குடியினர் நாட்டின் வறுமைக் கோட்டுக்கு கீழ் மிக வறிய நிலையில் இருப்பதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிளந்தான் அதற்கடுத்த நிலையில் இருக்கும் வேளை, இந்தப் பிரச்னைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதில் பாஸ்-சின் கவனம் இருக்க வேண்டுமென சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.