வளர்ப்புப் பிராணிகளின் பாதுகாப்பிற்கு சீரமைப்புகள் தேவையென விலங்குகளுக்கான 34 சமூக நல அமைப்புகள் கோரிக்கை
கோலாலம்பூர், நவ 12 – தெருக்களில் சுற்றித் திரியும் வளர்ப்புப் பிராணிகளை பாதுகாப்பதற்கான சட்டங்களில் சீர்திருத்தம் செய்யும்படி நாடாளுமன்றத்தில் விலங்குகளுக்கான 34 சமூக நலக் குழுக்கள் மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளன.
உலகளாவிய மனித உரிமைகள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த இந்த மகஜர் வழங்கும் நிகழ்ச்சி , மலேசிய விலங்குகள் நல சங்கத்தின் ஒத்துழைப்புடன் மலேசிய கைவிடப்பட்ட பிராணிகள் சங்கத்தின் தலைமையில் நடத்தப்பட்டது.
சட்டம் மற்றும் அமைப்புகளுக்கான சீரமைப்பு துணையமைச்சர் எம்.குலசேகரன், பெரா (Bera) நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதமருமான இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் கம்பார் MP சோங் ஜெமின் (Chong Zhemin) உட்பட பலர் இந்த மகஜரை பெற்றுக்கொண்டதாக கைவிடப்பட்ட வளர்ப்புப் பிராணிகள் சங்கத்தின் தலைவர் கலைவாணன் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
கைவிடப்பட்ட வளர்ப்பு பிராணிகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதை நிறுத்திவிட்டு , நமது மக்களிடையே பிராணிகள் தவறாக நிர்வகிக்கப்படுவதை தடுப்பதற்கான பொறுப்புணர்வை, வலியுறுத்த வேண்டியதை உறுதிப்படுத்த வேண்டிய நேரம் இப்போது ஏற்பட்டுள்ளதாக கலைவாணன் கூறினார்.
நாடு முழுவதும் விலங்குகள் நலனில் மனிதர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், செயல்படுத்தவும் மற்றும் ஆதரிக்கவும் பிரதமர் துறையின் கீழ் ஒரு அமைப்பை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்பது உட்பட எட்டு முக்கிய கோரிக்கைகளை இந்த மகஜர் கொண்டுள்ளது.