
புத்ராஜெயா, ஏப்ரல்-3- மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, இன, மத விரோதத்தைக் கிளப்பக்கூடிய மற்றும் பொது அமைதியை அச்சுறுத்தக்கூடிய உள்ளடக்கங்களை பரப்பியதாகக் கருதப்படும் சம்பவம் தொடர்பாக, இருவரை விசாரணைக்கு அழைத்துள்ளது.
அவ்விருவரும் facebook குழுவின் முதன்மை நிர்வாகிகள் ஆவர்.
பொது மக்களிடமிருந்து புகார் கிடைத்ததை தொடர்ந்து, மார்ச் 27-ஆம் தேதி இரவு 9 மணிக்கு MCMC தலைமையகமான சைபர் ஜெயாவில், அவர்களின் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டது.
அதன் போது, விசாரணைக்கு ஆதாரமாக ஒரு கைப்பேசி மற்றும் சிம் அட்டை பறிமுதல் செய்யப்பட்டதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் MCMC குறிப்பிட்டது.
இச்சம்பவம் 1998 ஆம் ஆண்டு தொடர்பு – பல்லூடக ஆணையச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 500,000 ரிங்கிட் வரை அபராதமும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
இவ்வேளையில், MCMC, அந்த facebook குழுவில் பதிவிடப்பட்ட இனவாதப் பதிவுகளை அகற்றுமாறு Meta நிறுவனத்திடம் 110 கோரிக்கைகளை முன்வைத்தது.
Meta மேற்கொண்ட விசாரணையின் மூலம், 106 பதிவுகள் facebook-ன் சமூகத் தர விதிமுறைகளை மீறியதாகக் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.
பொது மக்கள், இணைய சேவைகள் மற்றும் செயலிகளை தவறாகப் பயன்படுத்தாமல், எந்தவொரு இனத்தையோ மதத்தையோ குற்றமாக்கும் அல்லது வெறுப்பை தூண்டும் உள்ளடக்கங்களை பதிவேற்றம் செய்யக்கூடாது என MCMC அறிவுறுத்தியது.
இதுபோன்ற பொறுப்பில்லாத செயல்கள் வெறும் சட்டங்களை மீறுவதல்ல, பல இனத்தினரும் ஒற்றுமையாக வாழும் இந்த நாட்டின் சமுதாய அமைதிக்கும் ஆபத்தாக அமையும் எனவும் அது எச்சரித்தது.
MCMC வெளியிட்ட அறிக்கையில் அந்த facebok குழுவின் பெயர் குறிப்பிடப்படவில்லை; என்றாலும், Rumah Ibadat Haram Dibina Dimana Hari Ini? என்ற பக்கம் தான் அதுவென நம்பப்படுகிறது.
மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய இடமாற்ற பிரச்னை எழுந்த போது, யாரோ சிலர் ஒன்றிணைந்து அப்பக்கத்தை உருவாக்கினர்.
நாடு முழுவதும் எங்கெல்லாம் சட்டவிரோதமாகக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன என்பதை கண்டறிந்து புகார் கொடுப்பதற்காக அந்தக் குழு உருவாக்கப்பட்டதாம்.