
குபாங் பாசு, பிப் 2 – விளையாட்டிற்காக Pikap வாகனத்தின் , திறந்த பின்பகுதியில் தனது இரு பேத்திகளை அமர வைத்து கொண்டு சென்ற செயலால், ஆடவர் ஒருவர் போலிசின் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார்.
கருப்பு நிற தோயோத்தா ஹைலாக்ஸ் வாகனத்தில் , பொருட்களை வைக்குமிடமான திறந்தவாறு இருக்கும் பின்புறத்தில் 5, 6 வயதுடைய இரு சிறுமிகள் அமர்ந்து சென்ற 26 வினாடி காணொளி , சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டிருந்தது.
பெரியவர்கள் யாருடைய கண்காணிப்பு இன்றி சிறு பிள்ளைகளை அவ்வாறு சாலையில் கொண்டு சென்ற ஆடவரின் செயல் பொறுப்பற்றது என வலைத்தளவாசிகள் பலரும் திட்டியிருந்தனர்.
அதையடுத்து, நேற்று மாலை கம்போங் கோத்தா மெங்குவாங் பகுதியில், அந்த சிறுமியின் தாத்தாவான 65 வயதுடைய ஆடவர் கைது செய்யப்பட்டதாக , குபாங் மாவட்ட போலீஸ் தலைவர் ரொட்சி அபு ஹாசான் தெரிவித்தார். வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அந்த ஆடவர் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, வாகனமோட்டிகள், பழைய ஜித்ரா போலீஸ் நிலையத்தின் அருகில் உள்ள சாலை சந்திப்பில் சம்பந்தப்பட்ட Pikap வாகனம் சென்று கொண்டிருந்ததைப் பதிவு செய்திருந்தனர்.