
குவாலா லாங்காட், நவம்பர் 20 – கல் குவாரிக்கு கொண்டு செல்லும் வழியில், வாகனத்திலிருந்து காணாமல் போன வெடிமருந்து பெட்டி ஒன்றை போலீசார் அடையாளம் கண்டு வருகின்றனர்.
Cast Booster 400GMS ரக வெடிமருந்து நிரப்பப்பட்டிருந்த பெட்டி ஒன்று காணாமல் போன சம்பவம் தொடர்பில், இம்மாதம் 14-ஆம் தேதி, இரவு மணி 10.28 வாக்கில், 28 வயது உள்நாட்டு ஆடவர் ஒருவர் போலீஸ் புகார் செய்ததை, குவாலா லாங்காட் போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அஹ்மாட் ரிட்சுவான் முஹமட் நோர் சாலிக் உறுதிப்படுத்தினார்.
அதே நாள் அன்று அதிகாலை மணி 5.50 வாக்கில், நண்பர் ஒருவருடன், நிசான் நவாரா நான்கு சக்கர வாகனத்தில் வைத்து, அந்த வெடிமருந்து பெட்டியை பூச்சோங்கிற்கு கொண்டு செல்லும் வழியில் அது காணாமல் போனதாக, அவ்வாடவர் தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
சில்க் நெடுஞ்சாலையில் பயணித்த போது, பின்புற பன்னெட் திறந்திருப்பது குறித்து மற்றொரு வாகன ஓட்டி கொடுத்த எச்சரிக்கை சமிக்ஞையை தொடர்ந்து, அவ்வாடவர் அதனை சரியாக மூடியுள்ளார்.
எனினும், காலை மணி 8.25 வாக்கில், வாகனத்திலிருந்து பொருட்களை இறக்கி வைக்கும் போது தான், அதில் ஒரு பெட்டி காணவில்லை என்பதை அவர் உணர்ந்ததாக கூறப்படுகிறது.
தாம் பயணித்த வழி நெடுகிலும் சென்று தேடிய போதும், அப்பெட்டியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், அவ்வாடவர் போலீஸ் புகார் செய்ததாக கூறப்படுகிறது.
அச்சம்பவம் தொடர்பில், குற்றவியல் சட்டத்தின் 286-வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படும் வேளை ; அது குறித்து விவரம் அறிந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாரை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.