கோலாலம்பூர், ஜனவரி-9, கனரக வாகனங்களுக்கான பரிசோதனை மோசடி தொடர்பான விசாரணைக்காக, தலைநகரில் செயல்பட்டு வரும் வாகனப் பரிசோதனை மையமொன்றின் மேலும் 13 அதிகாரிகள் கைதாகியுள்ளனர்.
மலேசிய ஊழல் தடுப்பாணையமான MACC அதனை உறுதிப்படுத்தியது.
திங்கட்கிழமை கைதான 6 அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பலனாக, இப்புதிய கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
புத்ராஜெயா MACC அலுவலகத்திற்கு நேற்றும், நேற்று முன்தினமும் வாக்குமூலம் அளிக்க வந்த போது, 20 முதல் 40 வயதிலான அவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டதும் அந்த 13 வாகனப் பரிசோதனையாளர்களும் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்படுவர் என, MACC கூறியது.
Runner-ராக செயல்படுபவர்களிடமிருந்து மாதத்திற்கு 150 ரிங்கிட்டிலிருந்து 1,500 ரிங்கிட் வரை லஞ்சம் வாங்கிக் கொண்டு, கனரக வாகனங்களுக்கான பரிசோதனைகளை அவர்கள் சட்டவிரோதமாக அங்கீகரித்திருப்பது தொடக்கக் கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது.